பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு!

06.03.2026 07:29:51

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா. இவர் 2018ஆம் ஆண்டு தனது சமூகவலைதள பக்கத்தில் திமுக எம்பி கனிமொழி மீது அவதூறு பரப்பும் வகையில் மோசமான கருத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல இங்கும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்றும் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த கருத்துகளுக்கு பெரியார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இவரது கருத்துக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

அதை அந்த நீதிமன்றம் விசாரித்தது. இரு வழக்குகளில் எச்.ராஜாவுக்கு தனித்தனியாக ஆறு மாதம் சிறை தண்டனையும் ரூ 5000 அபராதமும் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து எச்.ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அப்போது மாதத்தின் ஒவ்வொரு முதல் வேலை நாளும், விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் எச்.ராஜாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனவே உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, விசாரணை மேற்கொண்டார். அப்போது எச்.ராஜாவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.