இலங்கையின் தூதுவர் அய்டின் ஒசுவை பாராட்டிய சபாநாயகர்.
இஸ்தான்புல்லில் உள்ள இலங்கையின் தூதுவர் அய்டின் ஒசு, அண்மையில் பாராளுமன்றத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் தூதரின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை இச்சந்திப்பின்போது பாராட்டிய சபாநாயகர், இச்சேவைக்காகத் தனது நன்றியையும் தெரிவித்தார்.
இலங்கையை ஊக்குவிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்புகளை பேணுவதற்கும் தூதுவர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையை ஊக்குவிப்பதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வழங்கப்பட்ட ஆதரவிற்காக தூதுவர் சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், துருக்கியில் இலங்கையின் நலன்களை மேம்படுத்த தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
மேலும், இலங்கையுடனான தனது நீண்டகால தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தொடர்பைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கையை தனது "இரண்டாவது வீடு" என்றும் அவர் விவரித்தார்.
இலங்கை பொருளாதாரம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நோக்கி அடைந்து வரும் முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய கௌரவ சபாநாயகர், நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பொருளாதார ஈடுபாட்டிற்கான மேலும் வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் துருக்கியுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், வலுசக்தி, சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும், முதலீட்டிற்கான புதிய வழிகளைக் கண்டறிந்து பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் ஜனக்க ராஜகருணா உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.