கனடா நபருக்கு துாக்கு உறுதி சீனாவுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு
போதை மருந்து வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஷெல்லன்பர்கின் மேல்முறையீட்டு மனுவை சீன நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நம் அண்டை நாடான சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் நிறுவனரின் மகள் மெங் வன்சூ.குற்றச்சாட்டுஇவர் ஈரான் மீதான பொருளாதார தடையை மீறி அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்து ஹாங்காங் வங்கிகளில் பொய் தகவல்கள் அளித்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று கனடா அரசு மெங் வன்சூவை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த சீனா, பழிக்குப் பழியாக தங்கள்நாட்டிற்கு வந்த கனடா குடிமகனான ராபர்ட் ஷெல்லன்பர்க் மீது போதை மருந்து கடத்தல் வழக்கு தொடர்ந்தது. இதில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. அத்துடன் சீனாவின் வெறி அடங்கவில்லை. நீதிமன்றம் வாயிலாக ஒரு நாள் மட்டும் விசாரணை நடத்தி ராபர்ட்டுக்கு துாக்கு தண்டனை வாங்கித் தந்தது.
இதை எதிர்த்து ராபர்ட் லியோனிங் மாகாண பொது நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் துாக்கு தண்டனையை உறுதி செய்தது.