கனேடிய நா.உறுப்பினர்களுடன் சுமந்திரன் – சாணக்கியன் கலந்துரையாடல்

24.11.2021 06:45:36

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அழைப்பின்பேரில், நேற்று (23) கனேடிய நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தபோது, இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்போது 15 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமாகவும், வடக்கு, கிழக்கில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான, சட்டவிரோத காணி அபகரிப்பு மற்றும் வள சுரண்டல்கள், அதனுடன் கூடிய அரசியல் நெருக்கடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேநேரம், மக்களுக்கு பயன்தரக்கூடிய எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் சம்பந்தமாகவும், சில திட்ட முன்மொழிவுகளை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கனேடிய அரசாங்கமானது தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டங்களை மிக விரைவில் பெற்றுத்தருவதற்கு உரிய அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் மீது பிரயோகிக்க வேண்டும் எனவும் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.