ஹாங்காங் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை !

18.10.2025 11:35:34

தேசிய பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, ஹாங்காங்கின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான HKD யை தடை செய்வதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

சீனாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஹாங்காங்கின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக HKD உள்ளது. இதன் சர்வதேச மற்றும் உள்நாட்டு தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை, அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC ) முன்னெடுத்துள்ளது.

குறித்த நிறுவனம், BCCW எனும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த BCCW நிறுவனத்தில், சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சீனா யூனிகாம் ஹாங்காங் நிறுவனம், 18.40 சதவீதம் ப ங்குகளை வைத்துள்ளது.

 

இந்த சீன தொடர்பை முக்கிய பாதுகாப்பு அபாயமாக கருதி அமெரிக்கா இந்நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

இதையடுத்து, HKD நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்நிறுவனத்துக்கு அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் கடிதம் அனுப்பி உள்ளது.

அமெரிக்க தொலைத்தொடர்புத் துறை அளித்துள்ள விளக்கத்தில், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும், கொள்கையின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளதுடன்
சீனா யூனிகாம் நிறுவனம் ஏற்கனவே, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த, 2022ல் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.