உலக அளவில் வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய்.

15.08.2024 07:15:56

உலக அளவில் குரங்கு அம்மை நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும் எனவே உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

குரங்கு அம்மை வைரஸ் காங்கோ நாட்டில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளதாகவும் இதனை அடுத்து உலகளாவிய பெரும் தொற்றுக்கான அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோயால் இந்த ஆண்டு மட்டும் 13 நாடுகளில் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 524 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
எனவே குரங்கு அம்மை பரவலை தடுக்க உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

குரங்கு அம்மை என்பது ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பு என்றும் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் சுகாதாரமாக இல்லாதவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. காய்ச்சல், தோலில் சிறு கொப்புளங்கள், தலைவலி, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது .