’திறந்த, சுற்றுலா விசாவில் செல்லாதீர்கள்’
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று நெருக்கடிக்கு உள்ளானால் இராஜதந்திர மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியாது எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,திறந்த விசா,சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்வதை இளைஞர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பாராளுமனத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற இராஜதந்திர சிறப்புரிமை சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வலியுறுத்தினார்.
மியன்மார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் அங்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.இவ்விடயம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் மியன்மார் சென்ற இலங்கையர்கள் கூலிப்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.மியன்மார் நாட்டில் மியாவாடி பகுதி அரச கட்டுப்பாட்டில் இல்லை .அங்கு இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மியன்மார் அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்திலும்,இராஜதந்திரத்துக்கு அப்பாற்பட்ட வகையிலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தோம். இதற்கமைய மூன்று குழுவினர் தாய்லாந்து எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.
மியாவாடி பகுதியில் மேலும் 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார். .
இளைஞர்,யுவதிகள் தொழில் வாய்ப்புக்களுக்காக திறந்த விசா,சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் ஊடாக தொழில் வாய்ப்புகளுக்கு செல்ல வேண்டும்
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் போது இராஜதந்திர மட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் எம்மால் முன்னெடுக்க முடியாது.மனிதாபிமான அடிப்படையில் மாத்திரமே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
ரஷ்யாவின் இராணுவ படையில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இவர்கள் சட்டவிரோதமான முறையில் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது. ரஷ்யாவின் ஊழிப்படையாக செயற்படும் இளைஞர்களை நாட்டுக்கு அழைத்து வர இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.