அருள்நிதியின் 'டிமான்டி காலனி 2'
அருள்நிதி நடிப்பில், அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டிமான்டி காலனி 2' திரைப்படம் மே மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் அஜய் ஆர். ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'டிமான்டி காலனி 2' எனும் திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜேனரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் சார்பில் பொபி பாலச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் முன்னோட்டம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. கிட்டத்தட்ட ஒரு கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் இலச்சினை வெளியிட்டு விழாவில் பங்கு பற்றிய இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் 'டிமாண்டி காலனி 2' படத்தின் வெளியீடு எப்போது? என கேட்டபோது, '' மே மாத இறுதியில் வெளியிடப்படுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இப்படத்தின் நீளம் 135 நிமிடம். இதில் 120 நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகளால் நிறைந்திருக்கிறது. இதனால் சர்வதேச தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது . இருப்பினும் இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை வழங்கும்': என்றார்.
உதயநிதி ஸ்டாலின் திரைத் துறையிலிருந்து விலகி விட்ட நிலையில் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து கலை சேவை செய்து வரும் அருள்நிதி நடிக்கும் திரைப்படங்கள் சரியான தருணத்தில் வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படத்தை பிடி ஜி யுனிவர்சல் எனும் புதிய கொர்ப்பரேட் நிறுவனம் வெளியிடுவதற்கான உரிமையை வாங்கி இருப்பதால் இப்படம் திட்டமிட்டபடி மே மாத இறுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அவதானிக்கப்படுகிறது.