அனைத்தையும் சீரமைப்போம்
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கின.
அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.
அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இதனால் தெருக்களில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
மேலும் உக்ரைன் பொதுமக்களும் போரில் குதித்துள்ளனர். அவர்களும் துப்பாக்கிகளுடன் தெருக்களில் வலம் வந்து ரஷிய படைக்கு எதிராக சண்டையிடுகிறார்கள்.
ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டின் உள் கட்டமைப்புகள் செயலிழந்த போதிலும் ராணுவ வீரர்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.
ரஷிய படை இதுவரை உக்ரைனின் சில நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ஆனால் தலைநகர் கிவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை இன்னும் கைப்பற்றவில்லை.
இந்த தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
முன்னதாக போரை துவங்கி உள்ள ரஷியா, அதற்கான விலையை கொடுக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜெலன்ஸ்கி கூறியதாவது:
உக்ரைனின் பல பகுதிகளுக்கு ரஷிய படையினர் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் ஒரு இடத்தில் கூட அவர்களால் முன்னேற முடியவில்லை பதிலுக்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. ஏனெனில், தாய்நாட்டை காப்பதற்காக லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள், ராணுவத்தினருடன் இணைந்து ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
மக்களின் இந்த எழுச்சியை ரஷிய ராணுவ வீரர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. உக்ரேனியர்களின் வீரத்தை பார்த்து ரஷிய படையினர் பல இடங்களில் இருந்து பின்வாங்கி வருவதாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பகுதிகளில், ரஷிய வீரர்களை உக்ரைன் மக்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களிடம் ஏன் உக்ரைனுக்குள் வந்தீர்கள் எனக் கேட்டால், 'எங்களுக்கு தெரியாது' எனக் கூறுகிறார்கள்.
உக்ரைன் மீது போரை துவக்கி உள்ளதற்கு ரஷ்யா உரிய விலையை கொடுக்கும். நாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், சுதந்திரத்தை இழந்துள்ளோம். அனைத்து வீடுகள், தெருக்கள், நகரங்கள் அனைத்தையும் சீரமைப்போம்.
உக்ரைனுக்கு எதிராக செய்த அனைத்திற்கும் நீங்கள் திருப்பி செலுத்துவீர்கள் என ரஷியாவிற்கு கூறி கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். “என்னை உயிரோடு பார்ப்பது இதுவே கடைசி முறையாகக் கூட இருக்கலாம் என செலன்ஸ்கி கூறினார்.
தொடர்ந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மீண்டும் ரஷியா மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதை கடவுள் பார்த்து கொண்டிருக்கிறார். கடவுள் தண்டிக்கும் போது ரஷியாவால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது. கடவுளிடமிருந்து ரஷியாவால் ஒருபோதும் தப்ப முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ராவ் கூறுகையில், அணு ஆயுத போர் பற்றிய எண்ணம் தொடர்ந்து சுழன்று கொண்டிருப்பது மேற்கத்திய அரசியல்வாதிகளின் கைகளில் தான் உள்ளது. ரஷ்யாவின் கைகளில் அல்ல எனக்கூறியுள்ளார்.