திமுகவுடன் தான் கூட்டணி.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஒருபுறம் சோனியா காந்தி திமுகவுடனான கூட்டணியே உறுதியானது என தெரிவிப்பதாகவும், மறுபுறம் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.
டெல்லியில் நடைபெற்ற ஆலோசனையில், "நம்பகமான மற்றும் நீண்ட கால கூட்டாளியான திமுகவுடனேயே காங்கிரஸ் பயணிக்க வேண்டும்" என்று சோனியா காந்தி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தவும், இளைஞர்களின் வாக்குகளை கவரவும் விஜய்யுடன் கைகோர்ப்பது சரியாக இருக்கும் என ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி தரப்பு கருதுவதாக தெரிகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர், திமுகவிடம் "ஆட்சியில் பங்கு" வேண்டும் என கேட்டு அழுத்தம் கொடுக்கின்றனர். திமுக அதற்கு மறுக்கும் பட்சத்தில், தவெக-வுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என ஒரு பிரிவினர் தலைமைக்குத் தூது அனுப்பி வருகின்றனர். இறுதி முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.