மாணவர்கள் விடுதியில் துணை முதல்வர் திடீர் ஆய்வு!

17.06.2025 08:43:42

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஆத்தங்கரைப்பட்டி இராஜேந்திரா நகரில் இயங்கி வரும் பிற்படுத்தட்டோர் நலத்துறை சார்பிலான அரசு மாணவர் விடுதிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விடுதியின் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்தார். விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பதையும் கேட்டறிந்தார் உதயநிதி. அவரை பார்த்த சந்தோசத்தில் மாணவர்கள் திக்குமுக்காடி போயிருக்கிறார்கள்.

மாணவர் தங்கும் அறைகள் - உணவு பொருட்கள் சேமிப்பு கிடங்கில் உள்ள பொருட்கள் - சமையல் அறை - உணவு சாப்பிடும் அறை - குளியலறை - கழிவறை உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்த அவர், சிலவாற்றில் தூய்மை இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். விடுதியை முறையாக பராமரித்து மாணவர்களின் உயர்வுக்கு துணை நிற்க வேண்டுமென அதிகாரிகள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார் உதயநிதி. மேலும், விடுதிக்குத் தேவையானதை உடனே செய்து தர வேண்டும் என்றும் அட்வைஸ் செய்தார்.