அர்ஜென்டினாவில் கிரிப்டோ வல்லுநர் சுட்டுக் கொலை
அர்ஜென்டினாவில் கிரிப்டோ வல்லுநர் சுட்டுக் கொலை: உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிய கும்பல்
இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாத்தித்து வந்தார். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என இதன் மூலம் தெரிவித்து விட்டேன்
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்தவர் ஃபெர்னாண்டோ பெரஸ் அல்கபா (வயது 41). அமெரிக்காவின் மியாமியில் சில காலம் தங்கியிருந்த இவர், பின்னர் ஸ்பெயினில் செட்டில் ஆனார். இவர் கிரிப்டோ கரன்சி குறித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லுநராக இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாத்தித்து வந்தார். தனக்கு கிடைக்கும் வருமானங்களை கொண்டு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இன்ஸ்டாகிராமில் அவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், அர்ஜென்டினாவிற்கு சென்ற அல்கபா, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்தார். ஜூலை 19 அன்று அந்த வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. இதனால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டடு, அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரத்தின் இன்ஜெனிரோ பட்ஜ் எனும் இடத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகே மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனாதையாக கிடந்த ஒரு சிகப்பு சூட்கேஸ் பெட்டியை கண்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அப்பெட்டியை பார்த்தபோது கண்டதுண்டமாக வெட்டப்பட்ட ஒரு உடல் இருந்தது. அந்த உடலில் இருந்த பச்சை குத்தப்பட்டிருந்த அடையாளங்களை கொண்டு இது அல்கபாவின் உடல் என கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனையில் அல்கபா துப்பாக்கியால் சுடப்பட்ட பின், அவர் உடலை துண்டு துண்டாக வெட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. கிரிப்டோ கரன்சியின் தற்போதைய வீழ்ச்சியினால் அல்கபா பொருளாதார சிக்கல்களை சந்தித்து வந்ததாக அவரின் சகோதரர் ரொடால்ஃபோ தெரிவித்தார். அல்கபா எழுதியிருக்கும் கடைசி குறிப்பு ஒன்றில், "கிரிப்டோ முதலீடுகளில் நான் கணிசமாக பணம் இழந்துள்ளேன். அர்ஜென்டினாவில் உள்ள வன்முறை கும்பலான பர்ரா ப்ராவா குழுவினரிடமிருந்து கடன் வாங்கியுள்ளேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என இதன் மூலம் தெரிவித்து விட்டேன்" என தெரிவித்திருக்கிறார். இதுதொட ர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.