’ இந்தியாவால் தகவல் வழங்கப்பட்டுள்ளது’

26.04.2024 07:58:13

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னால் சர்வதேச சூழ்ச்சி இருந்ததாக தெரியவில்லை என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. நிலந்த ஜயவர்தனவுக்கு வந்துள்ள போதும், அவரின் தொலைபேசியில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன. தகவல் தெரிந்தும் சம்பவங்கள் நடக்க இடமளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற பின்னர் கட்டுவாப்பிட்டிய சென்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கோட்டாபய ராஜபக்‌ஷ கூறினார். அப்படிதான் அவர் வந்தார்.

இந்தியாவை தாக்குதலுடன் தொடர்புபடுத்தி கூறுகின்றனர். ஆனால் இந்தியாவினாலேயே தாக்குதல் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது. 5 தடவைகள் தகவல் வழங்கியுள்ளது. விடுதைலைப் புலிகள் காலத்தில் இந்திய இராணுவத்தினர் இலங்கையின் பாதுகாப்புக்காக அவர்களின் உயிரையும் கொடுத்துள்ளனர். மோடி அரசாங்கம் முழுக் காலத்தையும் பொருளாதார அபிவிருத்திக்காகவே செயற்படுகின்றது என்றார்.