சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சி ஒருபோதும் வளைந்து கொடுக்கப் போவதில்லை!
|
சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சி தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்து கொடுக்கப்போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசாங்கம் தோற்கடிக்கப்படும் எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
|
|
பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் 04 ஆவது தேசிய மகா மாநாடு சனிக்கிழமை (05) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், பல்வேறு சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் எதிர்கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளது. இரண்டுக்கு மூன்றாக வளைந்து கொடுக்குமாறு எமக்குக் கூறப்பட்டால், அதற்கு அஞ்சி வளைந்து கொடுக்க வேண்டிய அவசியமோ, சிவப்பு ஜுண்டாக்கு அஞ்ச வேண்டிய அவசியமோ எமக்குக் கிடையாது. எமக்கு எந்தவித அச்சமும் இல்லை என்பதைத் மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்தே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அஞ்சுவதும் இல்லை, வளைந்து கொடுப்பதும் இல்லை என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கிறோம். வேறுவேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளாகிய எமக்குள் கருத்து வேறுபாடுகளும் உள்முரண்பாடுகளும் காணப்படலாம். ஆனால், தனிப்பட்ட அல்லது கட்சி நலன்களுக்கு அப்பால் தேசியப் பற்றும் நாட்டின் ஜனநாயக உரிமைகளும் எமக்கு மிக முக்கியமாகும். அந்த வகையில், மக்கள் நலன் சார்ந்து நாம் கொள்கை ரீதியாக இணைந்து செயற்படுவதில் எந்தவித பிரச்சினையோ அல்லது தயக்கமோ எமக்கு இல்லை. அதேவேளை, மக்கள் ஆணையினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமொன்றை சட்டவிரோதமான முறையிலோ, வன்முறைகள் மூலமாகவோ அல்லது வீதியில் இறங்கி கலவரங்களை ஏற்படுத்தியோ நாம் ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம். எமது கட்சிகளை சேர்ந்த தலைவர்களோ அல்லது கட்சிகளோ வரலாற்று ரீதியாக அவ்வாறான வன்முறை அரசியலை முன்னெடுத்ததும் இல்லை, அதனை ஆதரித்ததும் இல்லை. ஆனால், தற்போது அரசாங்கத்தை நடத்தி வரும் தற்போதைய ஆட்சியாளர்களே கடந்த காலங்களில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களையும் கலவரங்களையும் செய்து, அன்றைய அரசாங்கங்களை நிலைகுலையச் செய்தனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, எமது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து யாரும் தேவையின்றி பதற்றமடையவோ அல்லது தேவையற்ற அச்சம் கொள்ளவோ வேண்டியதில்லை. அரசியலமைப்புக்கு உட்பட்டு, தேர்தல் மூலம் ஜனநாயக வழியிலேயே நாம் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவோம். அது அரசியலமைப்பு ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கும் இந்நாட்டின் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையாகும். சரியான முறையில், சட்டபூர்வமான தேர்தல் களத்திலேயே இந்த அரசாங்கத்தை தோற்கடிப்போம் என்ற செய்தியையே உறுதியாகக் கூற விரும்புகிறோம். தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான நிர்வாக நகர்வுகளும் முடிவுகளுமே, அவர்களைத் தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தித் தரும் என மனோ கணேசன் மேலும் சுட்டிக்காட்டினார். |