அமெரிக்காவை நடுங்க வைத்த பாகிஸ்தானியர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் தான் அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவில் அரசியல் படுகொலைகளை செய்ய திட்டமிட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
கைதான ஆசிப் மெர்ச்சன்ட்டிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது கைதான ஆசிப் மெர்ச்சன்ட் டொனால்ட் டிரம்ப் உள்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை கொல்லும் சதித்திட்டத்துடன் அமெரிக்கா சென்றதாக சொல்லப்படுகிறது.
மேலும் ஆசிப் மெர்ச்சன்ட்டுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே தொடர்ந்து பிரச்சனை உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதற்கிடையே தான் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு ஆசிப் மெர்ச்சன்ட் ஈரான் சென்று வந்ததாக ஃஎப்பிஐ சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் அரசியல் கொலைகளை செய்வதற்காக சதித்திட்டத்துடன் அவர் ஈரானில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த குற்றப்பத்திரிகையில் இன்னொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அமெரிக்காவில் அரசியல் கொலைகளை அரங்கேற்ற ஆசிப் மெர்ச்சன்ட் கடந்த ஜூன் மாதமே பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார்.
நியூயார்க்கில் அவர் 2 கொலைகாரர்களுக்கு முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பெயர்களை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து புறப்பட முயன்றபோது சிக்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று நேரடியாக தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் சில முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால் அவரை கொலை செய்யும் திட்டமும் உள்ளதாக ஃஎப்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியா தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் டிரம்ப் மேடையில் பேசியபோது 20 வயது நிரம்பிய தாமஸ் மேத்யூ க்ரூஸ் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் டொனால்ட் டிரம்பின் காதில் காயம் ஏற்பட்டது. அந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார்.
இதையடுத்து டொனால்ட் டிரம்புக்கான பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் கடந்த மாதம் கைதான பாகிஸ்தானின் ஆசிப் மெர்ச்சன்ட் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் கூட பாகிஸ்தானின் ஆசிப் மெர்ச்சன்ட்டுக்கும், டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்ட தாமஸ் மேத்யூ க்ரூக்சுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றி எதுவும் குற்றப்பத்திரிகையில் கூறப்படவில்லை.