அன்னிய செலாவணி கடும் சரிவு வெளிநாட்டுநாணயங்கள் வைத்திருக்க இலங்கையில் கட்டுப்பாடு!!

26.06.2022 07:00:00

இலங்கையில் அன்னிய செலாவணி மிக மோசமாக குறைந்து வருவதால், தனி நபர்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்கள் வரம்புக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து பிரதமர் ரணில் உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்து, கடுமையான  பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. 

உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். 

 கையிருப்பில் அன்னிய செலவாணி இல்லாததால்,  வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதை இலங்கை நிறுத்தி உள்ளது.   இந்தியா உள்ளிட்ட நாடுகளும், சர்வதேச நிதியமும்  கடனுதவி அளித்தும் இலங்கை மீள முடியாமல் தவித்து வருகிறது.  

நாளுக்கு நாள் அன்னிய செலாவணி கையிருப்பு மோசமாக சரிந்து வருவதால், அதை கட்டுப்படுத்தவும் வெளிநாட்டு நாணயங்களை தனி நபர்கள்  வைத்திருக்கும் வரம்பில் கட்டுப்பாடு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.  

அதேபோல், வெளிநாட்டு நாணயங்களை பொதுமக்கள் வைத்திருப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். 

 அதன்படி, தனி நபர்கள் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கும் வரம்பை 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம் திகதியில் இருந்து 14 வேலை நாட்களுக்கு ஒருமுறை அதிகப்படியான வெளிநாட்டு நாணயத்தை வைப்பு செய்யவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலருக்கு விற்கவோ அனுமதிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, சர்வதேச நிதியம் மற்றும் உலக நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளை இலங்கை அரசு கேட்டு வருகிறது. அதன்படி, 2 நாட்களுக்கு முன் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு  ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் ரணிலை சந்தித்து ஆலோசனைகள் வழங்கியது. அதேபோல், அமெரிக்காவை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று இலங்கை வருகிறது.