’’பசுமை வழி’’யில் சீன வணிகர்கள் மூவர் சிக்கினர்.
ரூபாய் 83 இலட்சத்து 70 ஆயிரம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முற்பட்ட மூன்று வெளிநாட்டு பயணிகள் புதன்கிழமை (03) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், தாங்கள் கொண்டு வந்த உடமைகளில் எவ்விதமான சுங்கப் பொருட்களும் இல்லை எனத் தெரிவிக்கும் "பசுமை வழி" ஊடாக இதனைக் கடத்திச் செல்ல முயன்ற போதே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கூட்டு சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுடைய சீன நாட்டு வணிகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் புதன்கிழமை (03) அதிகாலை 02:45 மணியளவில், மலேசியாவின் கோலாலம்பூர் (Kuala Lumpur) நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான UL-319 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அங்கு அவர்கள் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளை ) சோதனையிட்ட போது, அவற்றுள் சீனாவில் தயாரிக்கப்பட்ட 55,800 சிகரெட்டுகளைக் கொண்ட 279 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களைக் கைது செய்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.