இஸ்ரேல் பதிலடி குறித்து ஈரான் வெளிப்படை!

07.10.2024 09:00:30

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டத்துடன் ஈரான் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணை வீசி திடீர் தாக்குதலை ஈரான் முன்னெடுத்தது. தங்கள் இலக்குகளில் 90 சதவிகிதம் சேதமேற்படுத்தியதாகவும் ஈரான் அறிவித்திருந்தது.

   

இந்த நிலையில், இஸ்ரேல் பதிலடி உறுதி என அறிவித்துள்ளதை அடுத்து, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும், எதற்கும் தாங்கள் தயார் என ஈரான் தரப்பு அறிவித்துள்ளது.

தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் ஈரான் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்தது. இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலை தொடுக்கும் என்றால், கண்டிப்பாக பதிலடி உறுதி என ஈரான் அறிவித்துள்ளது.

அத்துடன், இஸ்ரேலில் தங்களின் இலக்கு தொடர்பில் பட்டியல் ஒன்று தயாரித்துள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலானது இஸ்ரேல் மீது ஈரான் நடத்தும் இரண்டாவது நேரடியான நடவடிக்கையாகும்.

மட்டுமின்றி, ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா மற்றும் ஈரானின் புரட்சிகர படைகளின் மூத்த தளபதி ஒருவர் பெய்ரூட்டில் கொல்லப்பட்டுள்ளதற்கு பதிலடி அளிக்கும் பொருட்டே ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

சனிக்கிழமை ஈரான் வெளிவிவகார அமைச்சரும் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த தாக்குதல் உக்கிரமாக இருக்கும் என்றே அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, ஈரானின் எண்ணெய் உற்பத்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் கசிந்தது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

உலகின் மிகப்பெரிய 10 எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஈரானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.