அரச சேவையை அழிக்கிறது அரசாங்கம்.

11.02.2026 14:22:02

தற்போதைய அரசாங்கம் தகுதி மற்றும் அனுபவம் இல்லாத தமது கட்சியின் ஆதரவாளர்களைப் பதவிகளுக்கு நியமித்து, நாட்டில் எஞ்சியிருக்கும் அரச சேவையையும் அழித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்திற்கான நிதியை அனுமதித்தமை தொடர்பான சம்பவத்தில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க குறித்தும் அவர் தனது பதிவில் விசேடமாகத் தெரிவித்துள்ளார்.

சமன் ஏக்கநாயக்கவை தனக்குத் தனிப்பட்ட ரீதியில் தெரியும் எனவும், அவர் மிகவும் நேர்மையான மற்றும் உயர்தர தொழில்முறை அரச அதிகாரி எனவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நீதி வழங்குவது தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுவது நாட்டின் ஆட்சி முறைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "தொழில்முறை, திறமையான மற்றும் நேர்மையான அரச சேவை இல்லாமல் ஒரு அரசாங்கம் முன்னோக்கிச் செல்ல முடியாது. அரசியல் தலைவர்களுக்கு நிர்வாக அனுபவம் இல்லாவிட்டாலும், அவர்களிடம் அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும். அத்துடன் நாட்டை ஆளும்போது தொழில்முறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எமது உன்னத தேசத்தை மீண்டும் எப்படிக் கட்டியெழுப்புவது என்பதை ஜனநாயக ரீதியில் தீர்மானிக்க வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.