அமெரிக்காவின் ஹவாய் தீவு பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 53-ஆக உயர்வு
பலர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகினார்கள். காட்டுத்தீயால் இந்த தீவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். வாஷிங்டன்: அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயில் 8 தீவு நகரங்கள் உள்ளன. இங்கு 2-வது பெரிய நகரமாக மவுய் தீவு விளங்குகிறது. இந்த தீவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மவுய் தீவில் காட்டுத் தீ ஏற்பட்டது. படிப்படியாக இந்த தீ நகர் புற பகுதிகளுக்கு பரவியது. இதனால் வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் தீ பற்றி எரிந்தது. எங்கு பார்த்தாலும் தீ பிழம்பாக காட்சி அளித்தது. வானுயர எழுந்த கரும் புகையால் மவுய் நகரமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையடுத்து அந்த நகரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். பலர் காட்டுத்தீயில் சிக்கி உடல் கருகினார்கள். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து அமெரிக்க விமான படை மற்றும் கடற்படை வீரர்களும் தீயை அணைக்க போராடினார்கள். காட்டுத்தீ என்பதால் தீ கட்டுக்குள் அடங்க மறுத்தது. இருந்த போதிலும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தீயில் இருந்து தப்பிக்க பலர் பசிபிக் பெருங்கடலில் தீக்காயங்களுடன் குதித்தனர். இதில் சிலர் பலியானார்கள். இதனால் இந்த காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 53 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானவர்கள் தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.