பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

02.10.2021 12:00:26

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் கண்காணிப்பு அலுவலராக 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இதில், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மண்டலங்களில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்  தூர்வாரும் பணிகளையும், மழைகாலங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

 அனைத்து மண்டலங்களிலும் திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக மூடவோ அல்லது பாதுகாப்பு தடுப்புகளை அமைக்கவோ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், அந்தந்த மண்டலங்களில் உள்ள பாதுகாப்பற்ற நிலையில் அல்லது இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள கட்டடங்கள், சுவர்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவ்விடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

அதேபோல், திறந்த நிலையில் உள்ள மின்சார கேபிள்கள் மற்றும் மின்சார கசிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகள், சுரங்கப்பாதைகள் ஆகிய இடங்களில் நீரை வெளியேற்ற அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர் வசதியுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

 

மழைக்காலங்களில் சாலைகளின் குறுக்கே சாய்ந்து விழும் மரக்கிளைகளை அகற்ற தேவையான மரஅறுவை இயந்திரங்கள், மின்சார துண்டிப்பு ஏற்படும் இடங்களில் அவசர தேவைக்கான உயர் கோபுர மின் விளக்குகள் மற்றும் இதர பிற இயந்திரங்கள், வாகனங்களை பரிசோதித்து சோதனை ஓட்டம் செய்து பார்க்கவும் அறிவுறுத்தினார்கள்.

மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளிலிருந்து பொதுமக்களை மீட்டு பத்திரமாக தங்கவைக்க தற்காலிக முகாம்களை கண்டறிந்து அங்கு தேவையான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.   மண்டல அளவில் அவ்வப்பொழுது பிற சேவை துறை அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.