கமல், விஜய் சேதுபதியுடன் ‘விக்ரம்’ படப்பிடிப்பை தொடங்கிய லோகேஷ் கனகராஜ்

16.07.2021 10:58:34

 

கமல், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி உள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டே வெளியான போதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், இன்று விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.