5 வயது பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்!!

22.09.2021 03:08:07

நுகேகொடை பிரதேசத்தில், ஐந்து வயது எட்டு மாதங்களேயான பெண் குழந்தையைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்துப் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்திட்யசகர் நிஹால் தல்துவ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பெண் குழந்தையின் அயல்வீட்டுக்காரரே கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

20 வயதுடைய சந்தேகநபரை, நுகேகொட பிரதேசத்தில் வைத்து, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் இணைந்து கைதுசெய்தனர்.

சந்தேகநபர், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதுடன் அதனைக் காணொளியாக பதிவு செய்து அவரது நண்பர்களுக்கு சமூக ஊடகங்களினூடாக அனுப்பியுள்ளார்.

விசேடமாக நாம் பெற்றோரிடம் ஒரு விடயத்தைக் கோருகின்றோம். உங்களது பொறுப்பில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருங்கள்.

வீட்டிலிலுள்ள குழந்தைகள் எங்கு செல்கின்றார்கள், யாருடன் பழகுகின்றார்கள், யாருடன் தொடர்பில் இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் 24 மணித்தியாலங்களும் அவதானத்துடன் இருப்பது அவசியம் – என்றார்.