
பல கட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அநுர தரப்பு.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பல கட்சி முறைமையை ஒழிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பல கட்சி முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வாரஇறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே முன்னாள் ஜனாதிபதி இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கை பல்வேறு கருத்துக்களைக் கொண்ட ஒரு சமூகம். எனவே பல கட்சி முறைமையைப் பாதுகாப்பது ஜனநாயகத்திற்கு அவசியம்.
பல கட்சி முறை இழந்தால், நாட்டின் பல மக்களுக்கு குரல் எழுப்ப வாய்ப்புகள் இருக்காது. எனவே, அதனை ஒழிக்கும் செயல்முறைக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்.
76 ஆண்டுகால ஆட்சி
இலங்கை 1947 ஆம் ஆண்டு முதல் பல கட்சி முறைமையின் கீழ் உள்ளது. கடந்த 76 ஆண்டுகால ஆட்சியாளர்கள் நாட்டிற்கு நிறைய விடயங்களை ஆற்றியுள்ளனர். நிறைவேற்ற முடியாத பல விடயங்களும் இருந்தன” என தெரிவித்துள்ளார்.
மேலும், பல கட்சி முறைமையைப் பயன்படுத்தி பல நாடுகள் வளர்ச்சியடைந்துள்ள அதேநேரத்தில் பல கட்சி முறைமையை சரியாக செயல்படுத்தாததால் சில நாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.