பதவியேற்றதும் போராட்டக்காரரின் கூடாரங்களை உடைத்தெறிய உத்தரவிட்ட ரணில்

04.08.2022 09:46:43

அரசியல் மறுசீரமைப்பு மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறலை எதிர்பார்க்கும் செயற்பாட்டாளர்களை, தொந்தரவுக்கு உள்ளாக்கவும் தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 21 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவிப்பிரமாணம் செய்ததில் இருந்து ஆர்ப்பாட்டகாரர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், செய்தியாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், தேடுதல்கள் நடத்தப்படுவதும், தன்னிச்சையான கைதுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காவல்துறை, இராணுவத்தால் கைது செய்யப்படும் செயற்பாட்டாளர்கள்

இவற்றின் ஊடாக காவல்துறையினரும், இராணுவத்தினரும் எதிர்ப்புகளை அடக்க முயற்சிப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் காரணமாக அன்றைய அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து தப்பிச் செல்ல நேரிட்டது. அதன் பின்னர் கடந்த ஜூலை 15 ஆம் திகதி பதவி விலகினார்.

படையினருக்கு உத்தரவிட்ட ரணில்

அதனையடுத்து ஜூலை 20 ஆம் திகதி புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இந்நிலையில், 22 ஆம் திகதி, போராட்டக்காரர்களை கலைக்குமாறும் கொழும்புக்கு மத்தியில் இருந்த அவர்களின் இடங்களை உடைத்தெறியுமாறும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டார்.

இதன் பின்னர் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை இலக்கு வைத்து கைதுகள் மற்றும் தடுத்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை காண முடிகிறது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் கூறியுள்ளது.