சிரியாவில் அமெரிக்க போர் விமானத்தை நெருங்கி பறந்த ரஷிய போர் விமானம்

18.07.2023 06:42:42

சிரியாவில் அமெரிக்க போர் விமானத்தை நெருங்கி பறந்த ரஷிய போர் விமானம்

சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய விமானங்கள் இடைமறிக்கின்றன இரண்டு வாரங்களுக்கு முன் ஆளில்லா விமானத்தை இடைமறித்து அச்சுறுத்தியது சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய போர் விமானங்கள் அமெரிக்க விமானங்களை வழிமறித்து மிரட்டும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே, ஆளில்லா விமானத்தை அச்சுறுத்தும் வகையில் ரஷிய போர் விமானம் பறந்த நிலையில், தற்போது MC-12 என்ற இரண்டு என்ஜின் கொண்ட போர் விமானத்தின் அருகில் பறந்து அச்சுறுத்தியுள்ளது. இந்த விமானம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

அமெரிக்க போர் விமானத்தில் 4 பேர் இருந்துள்ளனர். ரஷிய போர் விமானம் நெருங்கி பறந்தபோது, திடீரென அமெரிக்க விமானம் குலுங்கியதாக தகவல் உள்ளாகியுள்ளது. இருந்தாலும், விமானம் விபத்தில் இருந்து தப்பியது.

இந்த விவரங்களை மட்டுமே தெரிவித்த அமெரிக்கா, மேற்கொண்டு இதுகுறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஈரான், சிரியா அரசுகளுடன் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பை வளர்த்துக் கொண்டு வரும் ரஷியா, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சிரியா எல்லையில் தனது அதிகாரித்தை அதிகரித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதாக சிரியாவில் சுமார் 900 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் ஆளில்லா மற்றும் போர் விமானங்கள் மூலம் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். சிரியாவில் உள்நாட்டு போர் வெடித்தபோது, ரஷியா அரசுக்கும் அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.