முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை!

21.09.2026 13:47:16

தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு எல்-நினோ ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பதால், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இன்று மதியம் 12 மணியளவில், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார்.

நீர் நிலைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட இருக்கிறது. வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் கடலோர மற்றும் வட உள் மாவட்டங்களைதான் அதிக அளவில் பாதிக்கும். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள், முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்கின்றனர்.

எல்-நினோ ஆண்டுகளில் புயல்கள் மிக தீவிரமாக இருக்கும். வங்கக்கடலில் உருவாகும் புயல்களை எப்படி எதிர்கொள்வது? புயல் காலங்களில் மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மாற்று இடங்கள் என்ன? உணவு, மின்சாரம், குடிநீர் இவையெல்லாம் தடையின்றி கிடைக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆலோசனையில் பேசப்பட இருக்கிறது. டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை, காவிரி நீரை நம்பியிருந்ததால் குறுவை சாகுபடி லேட்டாகத்தான் தொடங்கியது. விரைவில் வடகிழக்கு பருவமழையும் தொடங்க இருப்பதால், குறுவை சாகுபடி பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் அதை எப்படி சமாளிப்பது? விவசாயிகளுக்கான இழப்பீடு என்ன? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது.