அதிமுகவில் நடப்பது என்ன?

31.12.2025 11:57:45

ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் தமிழ்நாடு வரவுள்ள நிலையில், இன்று மாவட்டச் செயலாளர்களை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டி இருக்கிறார். இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி விவகாரம் குறித்து பேசப்படலாம் என்று சொல்லப்படுகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. திமுக கூட்டணி இணக்கமாக இருக்கும் சூழலில், அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இணைந்துள்ளது.

மற்ற சிறிய கட்சிகள் இணைய தயாராக இருந்தாலும், தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதேபோல் இரு கட்சிகளுமே அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. இப்படியான சூழலில் தேமுதிக மாநாட்டில் கூட்டணி நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறி இருக்கிறார். பாமக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதனால் இன்னும் பாமக கூட்டணி உறுதி செய்யப்படாமலேயே இருக்கிறது. இதனை விரைவாக முடிக்க எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். அதேபோல் பாஜக தரப்பும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை விரைவாக முடித்து பிரச்சாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு வாரத்திற்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்தார்.

தற்போது ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மீண்டும் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை வரும் பியூஷ் கோயல் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச உள்ளார். அதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார். இன்று காலை 10 மணிக்கு எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி விவகாரம் தொடர்பாக இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலையும் முடிவு செய்ய இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.