மூன்று பில்லியன் அளவு தடுப்பூசி உற்பத்திக்கு ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!
2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிராந்தியத்தின் கொரோனா தடுப்பூசி உற்பத்தித் திறனை இரண்டு முதல் மூன்று பில்லியன் அளவுகளாக உயர்த்துவதை ஐரோப்பிய ஒன்றியம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஒன்றியத்தின் தொழில்துறை ஆணையாளர் தியரி பிரெட்டன் (Thierry Breton) தெரிவித்துள்ளார்
இத்தாலிய ஊடகமொன்றுக்கு இன்று (புதன்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா உற்பத்தி அளவு வாரத்திற்கு வாரம் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தடுப்பூசித் திட்டங்களை விரைவாகச் செயற்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இதுவரை 43 மில்லியன் தடுப்பு மருந்து கிடைத்துள்ள போதும், 30.2 மில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரெட்டன் கூறியுள்ளார்.
இதேவேளை, மார்ச் மாத இறுதிக்குள் 95 முதல் 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை செலுத்தி முடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.