செனாப் பாலத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

06.06.2025 14:21:00

இந்தியாவின் உள்கட்டமைப்பு பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் வகையில், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் ரயில் பாலத்தை (Chenab railway bridge) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (06) திறந்து வைத்தார்.

ஜம்பு-காஷ்மீர், உதம்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், பிரதமர் மோடி செனாப் பாலம் தளத்திற்கு விமானத்தில் சென்று அந்த ரயில் பாலத்தை முறையாகத் திறந்து வைத்தார்.

ஏப்ரல் மாதம் 26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லையைத் தாண்டி நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் என்ற இராணுவத் தாக்குதலுக்குப் பின்னர், ஜம்மு-காஷ்மீருக்கான அவரது முதல் பயணத்தை இது குறிக்கிறது.

இந்தப் விஜயத்தின் போது, ​​காஷ்மீரை இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்கும் லட்சியத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளமுள்ள செனாப் பாலம் ஒரு கட்டிடக்கலை சாதனையாகும்.

குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பாலம் பாரிஸின் ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விஞ்சி, உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் (USBRL) திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.