”முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி”.

12.10.2025 15:37:51

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மற்றும் நாட்டிற்கு வரும் முதலீடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

நாட்டின் முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக சூழல் மற்றும் சட்ட நிலைமைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழுவுடன் சனிக்கிழமை (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடுகளுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முதலீடுகள் தொடர்பாக முந்தைய அரசாங்கங்களின் கீழ் இருந்த முறைகேடுகளை மாற்றி தற்போதைய அரசாங்கம் ஜனநாயக கட்டமைப்பிற்குள் புதிய சட்டங்களை உருவாக்கி வருவதாகவும், ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும், இதற்காக, அரசாங்கம் முதலீட்டு பாதுகாப்பை உறுதி செய்யும், முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் மற்றும் வசதிகளை வழங்கும் என்றும், முதலீட்டு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்நாட்டு முதலீட்டு சூழலை  பலப்படுத்துவதற்காக இனவாதம் மற்றும் மதவாதம் எனபவற்றை  ஒதுக்கி  தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல், செயற்திறனான அரச  சேவையை உருவாக்குதல், இராஜதந்திர உறவுகளை வெளிப்படையான முறையில் பராமரித்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தொழில்நுட்ப தடைகளைத் வெற்றி கொள்ளுதல் ஆகிய நோக்கங்களை அடைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , அமெரிக்க தூதுக்குழுவிடம் மேலும் தெரிவித்தார்.

Crow Holdings  தலைவர் ஹார்லன் குரோ (Harlan Crow),

அமெரிக்க-இந்திய நட்புறவு மற்றும் M&A வர்த்தக தலைவர் கிருஷ்ணா பாலம், (Krishna Balam), Hudson Institute  தலைவர் சாரா ஸ்டெர்ன்(Sarah Stern), Eagle Capital Management நிறுவனர் மற்றும் இணைத் தலைமை முதலீட்டு அதிகாரி ரெவெனல் பி. கரி (Ravenel B. Curry), Billingsley இணை நிறுவனர் லூசி பெல்லிங்ஸ்லி, (Lucy Bellingsly), SMU Trustee சமூகத் தலைவர் கெதரின் க்ரோ  (Katherine Crow) සහ Hudson Institute  உறுப்பினர் வோல்டர் ரஸ்ஸல் மீட் (Walter Russell Mead) ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின்    சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்