நிவாரணம் பெறச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலானது தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காகக் குவிந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் போரினால் அப்பகுதியில் கடுமையான பஞ்சம் நிலவி வருகின்றது. அத்துடன் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு போதிய அளவில் உணவு மற்றும் உதவிப் பொருட்கள் கிடைக்காமையினால் அம் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஐ.நா. சார் அமைப்புகளால் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் வடக்கு காசா நகரில் நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 80 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.