ஒரே குடும்பத்தில் 18 பேர்கள் மொத்தமாக படுகொலை

07.10.2024 09:01:35

18 உறவினர்களைக் கொன்றது தொடர்பாக தென்னாப்பிரிக்க காவல்துறை மூன்று பேரை கைது செய்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிராமப்புற வீட்டுத் தோட்டத்தில் மொத்தம் 18 பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இந்த வழக்கில் தற்போது பரபரப்பு திருப்பமாக மூவர் கைதாகியுள்ளதுடன், நான்காவது சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கிழக்கு கேப் மாகாணத்தில் செப்டம்பர் 28 அதிகாலையில் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.

   

லூசிகிசிகியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவயிடத்திலேயே 17 பேர்கள் கொல்லப்பட, 18வது நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

கொல்லப்பட்டவர்கள் 14 முதல் 64 வயதுடையவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதில் 15 பேர்கள் பெண்கள் என்பதுடன், பல பேர்கள் தலையில் சுடப்பட்டு மரணமடைந்துள்ளனர்.

பாரம்பரிய விழாவிற்கு குடும்பத்தினர் அனைவரும் கூடியிருந்த நிலையிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் நோக்கம் குறித்து தகவலேதும் வெளியாகவில்லை.

இந்த படுகொலை சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் அதிக தனிநபர் கொலை விகிதங்களைக் கொண்ட நாட்டில் குற்றச் செயல்களில் இருந்து அதிக பொலிஸ் பாதுகாப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.