பிரித்தானியாவுக்கான அரசாங்கத்தின் பதில்.

07.04.2025 08:00:00

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து ஓய்வுபெற்ற ஜென்ரல் சவேந்திர சில்வா, அட்மிரல் வசன்த கரண்ணாகொட ஜென்ரல் ஜகத் ஜயசூரிய மற்றும் கேணல் கருணா என அழைக்கப்படும் முன்னாள் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா விதித்திருக்கும் தடையை வன்மையாக கண்டிக்கிறோம் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில் வெட்கப்படக்கூடியதாக இருக்கிறது என ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறியதாக ஓய்வுபெற்ற இராணுவ தளபதிகளுக்கு பிரித்தானியா விதித்திருக்கும் தடை உத்தரவு தொடர்பில் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் ஜீ.வீரசிங்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரித்தானியா சுமார் 50 வருட காலமாக இலங்கையை அதன் காலனித்துவ நாடாக வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று, நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்ததுடன் உலகம்பூராகவும் பல நாடுகளை இவ்வாறு தனது காலனித்துவத்துக்குக் கீழ் வைத்துக்கொண்டிருந்தது.

அவ்வாறு உலகம் பூராகவும் நாடுகளை சூறையடித்துக்கொண்டு அவர்கள் தங்களின் செளபாக்கிய ஆட்சியை கட்டியெழுப்பிய நிலையில் தற்போது ஏனைய நாடுகளுக்கு மனித உரிமை பாதுகாப்பது தொடர்பில் வழிகாட்டி வருகிறது.

பிரித்தானியாவின் கொடூர காலனித்துவத்து ஆட்சியில் இலங்கையின் சமூகங்களுக்கு மத்தியில் ஐக்கியமின்மை ஏற்பட்டதுடன் அந்த கொள்கை நாட்டுக்குள் ஐக்கியம், தொடர்புகளுக்கு பாதிப்பாக இருப்பதற்கும் இறுதியில் பாரிய பிளவுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன. பிரித்தானியாவின் இந்த செயற்பாடுகள் தொடர்பில் கவலை தெரிவிப்பதற்கு பிரித்தானியா தவிர்த்துள்ளது.

இலங்கையில் பிரிவினைவாத ஆயுத போராட்டத்தை முடித்துக்காெள்வதில் முக்கியமான பணியை மேற்கொண்ட நபர்களை தெரிவுசெய்து, அவர்களை தண்டிப்பதற்கு பிரித்தானியா எடுக்கும் முயற்சி அவர்களின் தெளிவான போராமையை வெளிப்படுத்தியுள்ளது. இவர்களுக்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றபோதும்

பலஸ்தீன் காஸாவில் இடம்பெற்றுவரும் இன அழிப்பு, அப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் சட்டவிராேத ஆக்கிரமிப்பில் கலந்துகொண்டு இலட்சக்கணக்கானவர்களை கொலை செய்வதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கியதை உலக மக்களிடம் மறைக்க முடியாது.

அனைவரையும் உள்ளடக்கிய இலங்கை தேசம் ஒன்றை கட்டியெழுப்புதற்கான பயணத்தில் இலங்கை தீர்க்கப்படாத இனவாத பதற்றம் மற்றும் சவால்களுடன் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பதை ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மிகவும் சிந்தனை ரீதியிலான செயற்பாட்டு நடவடிக்கைகள் அவசியமாகும்.

சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடுபங்களை அங்கீகரித்தல், அவர்களின் உள்ளங்களில் அமைதி மற்றும் கெளரவத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, இந்த பிரச்சினையைத் தீர்க்கும்போது மிகவும் நிலையான மற்றும் பரந்துபட்ட முயற்சியை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் பிரித்தானியாவின் இந்த தடைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில் தொடர்பில் ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சியின் விரக்தியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரித்தானியாவின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதற்கு பதிலாக, அரசாங்கத்தின் பதில் கோழைத்தனமான மற்றும் வெட்கப்படும் வகையில் அமைந்துள்ளதுடன் தேசத்தின் இறையாண்மை மற்றும் அதன் மக்களின் கெளரவத்தைப் பாதுகாப்பதற்கு முடியாமல் போயிருக்கிறது.

அதனால் வெளி தலையீடுகளை நிராகரித்து, கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் நீதியின் மூலம் தேசம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டு மிகவும் உறுதிமிக்க நிலைப்பாட்டை எடுக்குமாறு ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறது.