தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்!

21.05.2026 08:27:21

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 19 முதல் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் தான் தவெகவில் அமைச்சராக வாய்ப்புள்ள நபர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாக உள்ளது. தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றார். இவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

    

 

தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வரை இடம்பெறலாம். ஆனால் தற்போது வரை 10 பேர் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். இன்னும் 25 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் முதலாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளது.

சென்னை மக்கள் பவனில் (ஆளுநர் மாளிகை) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதன்படி இன்று 19 முதல் 23 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அதில் தவெகவில் 19 பேர் அமைச்சர்களாக வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியில் 2 பேருக்கும், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து தலா ஒருவர் என மொத்தம் 23 பேர் வரை அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தை எடுத்து கொண்டால் என் மரிய வில்சன் - சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ அல்லது விஎஸ் பாபு - கொளத்தூர் எம்எல்ஏ

இசிஆர் பி சரவணன் - சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதி

எஸ். ரமேஷ் - ஸ்ரீரங்கம் எம்எல்ஏ

முகமது ஃபர்வாஸ் - அறந்தாங்கி எம்எல்ஏ

சத்யபாமா - திருப்பூர் வடக்கு எம்எல்ஏ

விஜய்தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு

வி சம்பத்குமார் - கோவை வடக்கு எம்எல்ஏ

ரேவந்த் சரண் - மதுரவாயல் எம்எல்ஏ

ஆர் விஜயசரவணன் - தஞ்சாவூர் எம்எல்ஏ

எம்வி கருப்பையா- சோழவந்தான் எம்எல்ஏ

மாதர் பதுருதீன் (முஸ்தபா) - மதுரை மத்திய தொகுதி

எம்எல்ஏ ஸ்ரீநாத் - தூத்துக்குடி

ஆர்எஸ் முருகன் - திருநெல்வேலி எம்எல்ஏ

சதீஷ் கிறிஸ்டோபர் - ராதாபுரம் எம்எல்ஏ

உள்பட இன்னும் சிலரது பெயர்கள் டாப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் தவெக உடன் உள்ள காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார், மதுரை மாவட்டம் மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது. விசிகவை எடுத்து கொண்டால் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். திண்டிவனம் தொகுதியில் வென்ற வன்னியரசு, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி ஆகியோர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் வன்னியரசுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை எடுத்து கொண்டால் வானியம்பாடி தொகுதியில் சையத் பாரூக் பாஷா வெற்றி பெற்றுள்ளார்.

பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் வென்றுள்ளார். இவர்கள் 2 பேரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஷாஜகான் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இன்று காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் அமைச்சராவது உறுதியாகி உள்ளது. ஆனால் விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்கள் ஆவார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. இந்த 2 கட்சியின் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்க வேண்டும். இவர்கள் பதவியேற்றால் மொத்தம் 23 பேர் பதவியேற்பார்கள். ஒருவேளை இவர்கள் தற்போது பதவியேற்காவிட்டால் தவெகவின் 19 பேர், காங்கிரஸ் கட்சியின் 2 பேர் என்று மொத்தம் 21 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.