தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

07.08.2021 15:18:01

கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மெரினாவில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் கலைஞரின் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

ஏராளமானவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை  8:23 மணிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்திற்கு வந்தார்.

பின்னர், மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச் செயலாளர்  துரைமுருகன்,  பொருளாளர் டி. ஆர்.

 

பாலு, முதன்மை செயலாளர் கே. என். நேரு, அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி, எ. வ. வேலு, பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், மா. சுப்பிரமணியம், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சீ. வி. மெய்யநாதன், எம். பிக்கள் தயாநிதிமாறன், ஆ. ராசா, கனிமொழி, ஜெகத்ரட்சகன், எம். எல். ஏக்கள் உதயநிதி ஸ்டாலின், மயிலை வேலு, எஸ். ஆர். ராஜா, கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், பிரபாகர் ராஜா மற்றும் பகுதிச் செயலாளர் மதன்மோகன் திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



தொடர்ந்து கலைஞர் வாழ்ந்த  கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவரின் உருவப்படத்திற்கு மு. க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை  செலுத்தினார்.   அதேபோல் சிஐடி காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார்.   பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகம் சென்றார். அங்கு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

பின்னர், கலைஞரின் விருப்பமான இடங்களில் ஒன்றான முரசொலி அலுவலகத்தில் உள்ள  சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இந்தநிகழ்ச்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக அண்ணா அறிவாலயத்தில்  உள்ள  கலைஞர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா கால நெறிமுறைகளை கருத்தில் கொண்டு அவற்றை முறையாக கடைபிடித்து அவரவர் இல்லத்தின் வாசலில் கலைஞரின் படத்தினை வைத்து, மாலையிட்டு மலர்தூவி, புகழ் வணக்கம் செலுத்த வேண்டும்.

பெரும் விழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள், ஒலிபெருக்கிகளை தவிர்க்க வேண்டும்.

நம் நெஞ்சங்களிலும், நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழிநடத்தும் முத்தமிழறிஞருக்கு வீடுகள் தோறும் மரியாதை செலுத்துவோம். என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு எளிய முறையில், கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து கலைஞரின் நினைவு தினத்தை அனுசரித்தனர்.   மேலும், தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அமைதி பேரணி மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் வழங்கினர். தமிழகம் மட்டுமல்லாது பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் துபாய் போன்ற நாடுகளிலும் கலைஞரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

 

அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.