நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் மற்றும் பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி நூல்வெளியீடு

21.04.2025 22:57:50

நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் மற்றும் பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி நூல்வெளியீடு – யேர்மனி

தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் மற்றும் பிரபாகரன் சாள்ஸ்அன்ரனி நூல் வெளியீடு ஆகிய இரு நிகழ்வுகளும் ஒரே மண்டபத்தில் 20.04.2025  அன்று நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடரினை; நூலாசிரியர் துளசிச்செல்வன்  திரு.இரவி (விடுதலைப்புலிகள் ரவி ), திரு.வீரமணி, திரு.பரந்தாமன், உட்பட ஐவர் ஏற்றினர். தமிழீழத் தேசியக்கொடியினை; உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பின் செயலாளரும், மூத்த உறுப்பினர் திரு.குணாளன் master அவர்களின் மகனுமாகிய திரு.நீருஜன் ஏற்றினார்.

அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு கரேன் மென்டிஸ் அம்மையார் மலர்மாலை அணிவிக்க,  தமிழீழத்தின்  முதலாவது தாக்குதற் தளபதி லெப்.சீலன் அவர்களது திருவுருவப்படத்திற்கு திரு.இளங்குட்டுவன் அவர்களும், சாள்ஸ் அன்ரனி அவர்களது திருவுருவப்படத்திற்கு திரு.இந்திரகுமார் அவர்களும், தொடர்ந்து லெப்.கேணல் அன்பு அவர்களின் சகோதரி, சாந்தி நேசக்கரம், ஆகியோர் நாட்டுப்பற்றாளர்களுக்கு மலர்மாலை அணிவித்தனர்.

தலைமையுரையை;  போராளிகளுக்கான அறிவுசார் திறன் புகட்டும் ஆசிரியர் திரு.அறிவுமணி அவர்கள் நிகழ்த்தினார். பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி அவர்களது நூல் வெளியீடு, காலத்தின் தேவை என்பது தொடக்கம், தமிழின வரலாறு தொடர்ச்சியாகப் பதியப்பட வேண்டும் என்பது வரை  அவரது உரையின் உட்கரு அமைந்திருந்தது.

 

 

நூலின் அவசியம் பற்றியும்,  நேர்த்தியான வரலாறை எழுத அனைவருக்கும் உரிமை உண்டெனவும் தனது உரையில் குறிப்பிட்டார் அகரம் மாதாந்த இதழின் ஆசிரியரும், ஐரோப்பியத் தமிழ் வானொலியின் இயக்குனருமான திரு. இரவீந்திரன் அவர்கள்.

சாள்ஸ் அன்ரனி மற்றும் துவாரகா ஆகியோருடன் ஒன்றாகக் கல்வி கற்ற, திரு கலைக்கோன் அவர்கள் தனது உள்ளக்கிடக்கையைப் பகிர்ந்துகொண்டார். தொடர்ச்சியாக தமிழீழப்பாடல்கள் ஒலித்தன. பாடல்களை; செல்வி அஸ்வினி ஈழப்பிரியன், செல்வி இலக்கியா ஈழப்பிரியன், செல்வி சந்தியா கேமச்சந்திரன், செல்வி தட்சா, செல்வி ரோஜனா, செல்வன் சாருஜன் ஆகியோர் சிறப்பாகப் பாடியிருந்தனர். தேசியத் தலைவனின் மகனான சாள்ஸ்அன்ரனி பற்றிய சிறப்புக் கவிதையொன்றை செல்வன் கஜன் அருந்தவராசா அவர்கள் சிறப்பாக வழங்கியிருந்தார். அன்னை பூபதியின் தியாகம் பற்றிய உரையை யேர்மன் மொழியில் செல்வி திகழ்கா முகுந்தன் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து; சாள்ஸ் அன்ரனி நூலின் முதற் பிரதியை ராதா படையணியைச் சேர்ந்த வரதன் அவர்கள் வெளியிட; திரு. இரவி (விடுதலைப்புலிகள்) பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை; castrop-Rauxel  தமிழாலய நிர்வாகி திரு.சுந்தரலிங்கம், Warendorf தமிழாலய நிர்வாகி கேமச்சந்திரன்,  தமிழீழச் செயற்பாட்டாளர் பாபு,  தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டியது எனது உரிமை எனப்போராடி வரும் நாதன் தம்பி,  ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

சாள்ஸ் அன்ரனி நூலின் ஆசிரியர் திரு. துளசிச்செல்வன் அவர்கள் உரையாற்றுகையில்; உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட  Genocide Chronicle எனும் தமிழினப்படுகொலை ஆவணக்கையேடு நூலின் சிறப்பு பற்றியும், அந்தக் கையேட்டின் அவசியம் பற்றியும்  உரையாற்றினார்.

நிகழ்வின் சிறப்புரையை “விடுதலைப்புலிகள் இரவி” அவர்கள் நிகழ்த்தினார்.  நூலாசிரியரின் ஆளுமை பற்றியும், தலைவருடன் அவருக்கிருந்த பிணைப்புப் பற்றியும் அவரது உரை வெளிப்படுத்தியது.

நிகழ்வை;  செல்வி மாதினி சுந்தரலிங்கம், செல்வி சந்தியா கேமச்சந்திரன் ஆகியோர் சிறப்புறத் தொகுத்து வழங்கினர். “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலோடு இரவு 20:45 மணியளவில், நிகழ்வு இனிதே நிறைவேறியது.