விமான டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் பலி

16.08.2021 16:00:00

ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க அமெரிக்க விமானத்தின் டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் விமானம் பறந்த போது வானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டைவிட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தை தலிபான்கள் மூடியதுடன் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. சில விமானங்கள் அங்கிருந்து இயக்கப்பட்டபோது, பலரும் முண்டியடித்து விமானத்தில் ஏறினர். அதேபோல், அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றும் காபூலில் இருந்து கிளம்பியது.

 

இதில் ஆப்கனில் இருந்து தப்பித்து செல்லவேண்டும் என பலரும் விமானத்தின் ஓரப்பகுதி, டயர் பகுதியில் தொங்கியபடி சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதில், தஞ்சம் கேட்டு ஆப்கன் மக்கள் பலர் விமானத்தை சுற்றி ஓடிவருவதாகவும், மறுபுறம் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவதை கொண்டாடும் விதமாக தலிபான் ஆதரவாளர்கள் அதை சுற்றி கோஷமிடுவதாகவும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும், விமானம் நடுவானில் பறந்தநேரத்தில் டயர் பகுதியில் தொங்கியபடி பயணித்தவர்களில் 3 பேர் வானத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.