பனை வள அபிவிருத்தித் துறையில் மோசடி - சுரேஸ் பிரேமச்சந்திரன்
வடக்கு- கிழக்கில் பனை வள அபிவிருத்தி தொடர்பில் படித்த தகுதி வாய்ந்த இளைஞர்கள், யுவதிகள் ஆயிரக்கணக்கில் இருக்கையில், இந்தத் துறையுடன் தொடர்பில்லாத 25 இற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர், யுவதிகளை பனை அபிவித்திச் சபை உள்வாங்கியிருப்பதாக மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பனைவள அபிவிருத்தி தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவர்கள் பெருமளவில் கொழும்பை மையமாகக் கொண்டு பணியாற்றி வருவது பனை அபிவிருத்தி சபை கீழ்நோக்கிச் செல்வதற்குக் காரணமாக அமைகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு,
வடக்கு கிழக்கில் 11 இலட்சம் பனைகள்
“பனை அபிவிருத்திச் சபையானது 1978 ஆம் ஆண்டு தென்னை அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு பனையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், பனை வளம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனவும் உருவாக்கப்பட்ட ஒரு சபையாகும்.
சிறிலங்காவின் பனை வளமானது முழுமையாக வடக்கு - கிழக்கையே சார்ந்துள்ளது.
ஏறத்தாழ 11 இலட்சம் பனை வளம் இங்கு இருப்பதாக அறியப்படுகிறது.
ஆனால் இதைக் கொண்டு நடத்தும் பனை அபிவிருத்திச் சபையானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
இதனால் சங்கங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு பனை வளத்தினை நம்பி வாழும் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பனைவள அபிவிருத்தியும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.
பனைவள உற்பத்தி மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்தி மட்டங்கள் ஒப்பீட்டளவில் கடந்த காலங்களைவிட மிகவும் குறைவாகவே காணப்படுவதுடன் பனை வளத்தினைக் கொண்டு பல்வேறு வகையான உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடியதாக இருந்தும் அவற்றின் உற்பத்தி ஊக்குவிக்கப்படுவதில்லை.
முதலாவதாக வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் இதன் தலைமைச்செயலகம் இருந்தபோதிலும் கூட பல இலட்சம் ரூபாய் வாடகையில் கொழும்பில் இன்னொரு தலைமைச் சங்கம் இயங்கிவருகிறது.
இதன் காரணமாக மிகப் பெருமளவிலான பனை வளத்தினை வடமாகாணம் கொண்டிருந்த போதிலும் கூட அதன் பலன் மக்களைச் சென்றடையவில்லை.
பனை மரத்தைப் பற்றியோ அதன் பயன்பாடு பற்றியோ அறியாத சிங்கள மொழிபேசும் தென்பகுதியைச் சார்ந்த ஒருவரை பனை அபிவிருத்திசபையின் தலைவராக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நியமித்தமை தவறானது.
அவர் தென்பகுதியைச் சார்ந்தவராக இருப்பதால் தேவைக்கு மேலதிகமான வாடகையைக் கொடுத்து கொழும்பிலே நிர்வாகத்தை நடாத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
வாழ்வாதாரம் பாதிப்பு