சென்னையில் 12 விமானங்கள் ரத்து.. அதிருப்தியில் பயணிகள்..!

01.07.2024 07:55:34

சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விமான பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து சீரடி மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் டெல்லி, சீரடி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நிர்வாக காரணங்களுக்காக இந்த ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 

எந்த விதமான சரியான காரணங்கள் கூறாமல் முன்னறிவிப்பின்றி விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதுபோன்ற போக்கை விமான நிறுவனங்கள் கைவிட வேண்டும் என்றும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக இருந்தால் முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் செய்ய கொடுக்க வேண்டும் என்றும் கடைசி நேரத்தில் விமானங்கள் ரத்து என்பதால் பல பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.