நெல்லையில் பயங்கரம்.

29.09.2026 15:23:39

நெல்லையில் சகோதரர்கள் இருவர் பட்டப்பகலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மணிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் டால்டன் (70), இவரது சகோதரர் நிக்கோலஸ் (65). இருவரும் அந்த பகுதியில் வசித்து வரும் சூழலில், இவர்களது வீட்டின் அருகே செந்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளது. இவர்கள் வசித்து வரும் பகுதி அருகே கோயிலும் அதன் அருகே செந்தில் குமாருக்கு சொந்தமான நிலமும் இருந்துள்ளது.

இந்த சூழலில், அந்த நிலத்தில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் குடும்பத்தினர் தங்களது காரை நிறுத்துவதற்காக மணல்களை அள்ளி நிரப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் செந்தில் குமாருக்கும், சகோதரர்கள் டால்டன் மற்றும் நிக்கோலஸுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், இதில் ஆத்திரமடைந்த செந்தில் குமார் தான் வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் டால்டன் மற்றும் நிக்கோலஸ் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை கண்ட டால்டனின் 16 வயது மகன், செந்தில் குமாரை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த சிறுவனையும் செந்தில் குமார் தாக்கியுள்ளார். இதில் டால்டன், நிக்கோலஸ் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே டால்டன் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே டால்டனின் தம்பி நிக்கோலஸும் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் செந்தில் குமாருக்கு காயம் ஏற்பட்டு அவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.