பிரபல பெண் ஊடகவியலாளர் மீது கொடூரத் தாக்குதல்

05.07.2023 10:37:12

பிரபல பெண்  ஊடகவியலாளர் ஒருவர்  மர்ம நபர்களால் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி உலகளவில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் செச்செனியா குடியரசில் இயங்கிவரும்  நொவாயா கெசெட்டா (Novaya Gazeta) எனப்படும் பத்திரிக்கை நிறுவனத்தைச் சேர்ந்த  எலெனா மிலாஷினா (Yelena Milashina) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் அலெக்சாண்டர் நெமோவ் என்ற வழக்கறிஞருடன் நேற்றுக்  காலை காரில் பயணம் மேற்கொண்டிருந்த போதே  அங்கு ஆயுதமேந்தி வந்த சில மர்ம நபர்கள்  எலெனா மீது கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதன்போது மர்ம நபர்கள் மிலாஷினா மற்றும் நெமோவ் ஆகியோர் முகத்தில் கொடூரமாத்  தாக்கி, அவர்கள்  மீது பச்சை நிறச் சாயத்தை வீசி, அவர்களது தலையில் மொட்டையடித்து, விரல்களை உடைத்து, தலையில்  துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளதோடு அவர்களது உபகரணங்களையும் அபகரித்து, அவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேலும் இங்கிருந்து வெளியேறுங்கள். இனிமேல்  எதுவும் எழுத வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல் ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட மெமோரியல் எனும் ஒரு உரிமை குழு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு உலகளவில் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு உடனடியாக இத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் உலகநாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மிலாஷினா  செசன்யாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை குறித்து பல வருடங்களாக எழுதிவரும் நிலையில்  அவருக்கு பலமுறை உயிர் அச்சுறுத்தல்கள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.