16 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அபுதாபியில் கொரோனா தடுப்பூசி !

27.03.2021 09:33:20

அபுதாபியில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் அறிவு மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

அமீரக சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறையுடன் இணைந்து அபுதாபி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து வரும் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட தகுதியுடையவர்களாக இருந்த போதிலும், அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உடன் இருக்க வேண்டும். மேலும் தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக அமீரக அடையாள அட்டையை வழங்க வேண்டும். அதனையடுத்து மருத்துவர் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை பரிசோதனை செய்வர். அதன்பின்னரே அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

இந்த தடுப்பூசி போடும் பணியானது ஆரம்பகட்டமாக, அபுதாபியின் சேக்புத் நகரில் உள்ள அல் வதன் பள்ளிக்கூடத்திலும், அல் அய்னில் உள்ள அல் ஜனயின் பள்ளிக்கூடத்திலும், அல் தப்ரா பகுதியில் பாத்திமா மருத்துவ அறிவியல் கல்லூரியிலும் நடக்கிறது.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த பணியானது அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதியுடன் நிறைவடையும்.

அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அபுதாபி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் படித்து வரும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு போட முடிவு எடுக்கப்பட்டது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.