"தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது" .

10.06.2026 14:49:52

முதல்வர் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ வீடியோவில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தை பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன என்று பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். வீடியோ ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன், பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

  

முதல்வர் விஜய்யால் தொடங்கி வைக்கப்படுவதற்கு முன்பாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் தொடர்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் தமிழில் இடம்பெற்ற வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் இருந்தன. தமிழ்நாடு அரசு, வாய்மையே வெல்லும், ஆலந்தூர் மெட்ரோ நிலையம் உள்ளிட்ட வார்த்தைகள் எழுத்துப் பிழையுடன் இடம்பெற்றிருந்தன. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும். இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோவிலேயே எழுத்துப் பிழையுடன் தமிழ் வார்த்தைகள் இடம்பெற்றது விமர்சனத்தை பெற்று வருகிறது.

இதுகுறித்து பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட ஏஐ காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் வார்த்தைப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன. பெண்கள் பாதுகாப்பை முன்னிறுத்தும் முக்கிய நிகழ்ச்சியில் தமிழ் மொழிக்கு உரிய மரியாதை வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது.

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் காலத்தில், ஒரு சில நிமிட ஏஐ காணொளியைக் கூட சரியான தமிழில் தயாரிக்க முடியாத நிலை அரசுத் துறைகளின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன் யாரும் பரிசீலிக்கவில்லையா? அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா? பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துரைத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் தாய்மொழியிலான ஒரு சிறு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது என்று தெரிவித்துள்ளார்.