பாலியல் குற்றச்சாட்டு: நியூயார்க் கவர்னர் ராஜினாமா

11.08.2021 15:05:42

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு ஆளான நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


அமெரிக்காவின் நியூயார்க் மாகாண கவர்னரும் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவருமான ஆண்ட்ரூ குவாமோ, தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முன்னாள், இந்நாள் அரசு பெண் ஊழியர்கள் உட்பட பல பெண்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து, நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் விசாரணைக் குழு அமைத்தார். அந்தக் குழு, 179 பேரிடம் விசாரணை நடத்தியது. ஆளுநரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 5 மாத விசாரணைக்குப் பின், அந்தக் குழு கவர்னர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்தது.


இந்நிலையில் நேற்று ஆண்ட்ரூ குவாமோ செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். என் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டு நியாயமற்றது; பொய்யானது. எனது ராஜினாமா 14 நாள்களில் நடைமுறைக்கு வரும்' என்றார்.

நியூயார்க்கின் அடுத்த கவர்னராக அந்த மாகாணத்தின் துணை கவர்னராக உள்ள கேத்தி ஹோக்கல் பதவியேற்கவுள்ளார். இவர் கவர்னராக பொறுப்பேற்றால், அந்த மாகாணத்தின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.