தலிபான்களை பேட்டி கண்ட முதல் பெண் பத்திரிகையாளர் ஆப்கனில் இருந்து வெளியேறினார்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியைப் பிடித்து சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறது. இதனை அடுத்து அந்நாட்டில் உள்ள மூத்த பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக்கலைஞர்கள், விளம்பர மாடல்கள், தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோர் வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இவர்கள் குடியேறி உள்ளனர். இந்நிலையில் டோலோ நியூஸ் எனப்படும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளது தற்போது வைரலாகி வருகிறது. ஆர்காண்ட் என்கிற இந்த பெண் பத்திரிக்கையாளர் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தலிபானின் மூத்த உறுப்பினர் ஒருவரை நேர்காணல் செய்ததன் மூலம் பிரபலமானார். இதன்மூலம் தலிபான் உறுப்பினரை பேட்டி கண்ட முதல் பெண் பத்திரிகையாளர் என்ற பெயரை ஆர்காண்ட் பெற்றார்.
அவரது இந்த நேர்காணல் உலகின் பல நாடுகளில் வைரலானது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எதிர்காலம் குறித்து அவர் எழுப்பிய கேள்வி மற்றும் விவாதம் ஆகியவற்றை அமெரிக்கா கூர்ந்து கவனித்தது. 24 வயதான இளம் பத்திரிகையாளரான ஆர்காண்ட் மேற்கொண்ட இந்தப் பேட்டியை அடுத்து சர்வதேச அளவில் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார்.
கடந்த 1996 முதல் 2001 வரை தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்தபோது இதுபோன்ற வெளிப்படையான நேர்காணல்களை கொடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓர் தனியார் ஊடகம் தலிபான் உறுப்பினர்களை இந்த அளவுக்கு கேள்விகள் மூலம் ஆராய்ந்து உள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி இருந்தது. டோலோ செய்தித் தொலைக்காட்சியில் வெறும் 50 நாளில் மட்டுமே ஆர்காண்ட் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கனை விட்டு வெளியேற உள்ளதாக சி.என்.என். ஊடகத்திற்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
ஆர்காண்ட் மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன்காரணமாக டோலோ தொலைக்காட்சி புதிய பத்திரிகையாளர்களை பணியமர்த்த தீவிரம் காட்டிவருகிறது என்று இந்த தொலைக்காட்சியினை நடத்தும் நிறுவனமான மொபி குரூப் தலைமை நிர்வாகி சாட் மோசேனி தெரிவித்துள்ளார்.
ஆர்காண்ட் முன்னதாக பாக்., கல்வி உரிமை ஆர்வலர் மலாலா யூசுப்சாயை பேட்டி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மலாலா ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தது அதுவே முதல்முறை ஆகும். ஒருவேளை எதிர்காலத்தில் தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவி சட்டம் ஒழுங்கு சீரானால் தான் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு வந்து பத்திரிக்கை துறையில் பணியாற்ற விரும்புவதாக ஆர்காண்ட் தெரிவித்துள்ளார்.