தங்கலான், வாழை புறக்கணிக்கப்பட்டதா?

21.07.2026 13:25:24

சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தமிழ் சினிமா வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த  ராயன் , சிவகார்த்திகேயனின் 'அமரன்', விஜய் சேதுபதியின்  மகாராஜா , தனுஷின்  கேப்டன் மில்லர்  மற்றும் கார்த்தி-அரவிந்த் சாமி நடித்த  மெய்யழகன்  போன்ற பல தமிழ்த் திரைப்படங்கள் இந்த விருதுப் பட்டியலில் இடம்பிடித்துப் பெருமை சேர்த்துள்ளன.

இருப்பினும், தனுஷ் இயக்கி, நடித்த  ராயன்  திரைப்படம் சிறந்த படத்திற்கான அங்கீகாரத்தைப் பெற்றதற்கு இணையத்தில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சுற்று சூழல் பாதுகாப்பு குறித்த ஒரு பிரிவில் கேப்டன் மில்லர் படம் தேவு செய்யப்பட்டிருப்பது மிகவும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' மற்றும் மாரி செல்வராஜின் வாழை  போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படாதது ஏன் என சினிமா ரசிகர்களும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மக்களின் வாழ்வியலையும், விளிம்புநிலை மக்களின் வலியையும் பேசிய வாழை மற்றும் தங்கலான் போன்ற காவியப் படைப்புகள் விருதுக் குழுவின் கண்களுக்குத் தெரியவில்லையா? விருதுகளின் தேர்வில் நியாயம் இல்லையா? என்று சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் வருகின்றன.

இந்த சர்ச்சை குறித்துப் பிரபல இயக்குநரும், தமிழ் சினிமாவின் முக்கியப் படைப்பாளியுமான மிஷ்கின் பேசுகையில்,

ஒரு இயக்குநர் தனது முழு உழைப்பையும் போட்டு ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கிவிட்டால், அதற்கு மேல் விருதுகள் என்பது வெறும் ஊக்கத்தொகை மட்டுமே தவிர, அதுவே படத்தின் தரம் அல்ல. வாழை மற்றும் தங்கலான  போன்ற சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் கிடைக்கவில்லை என்பதற்காக நாம் தேசிய விருதுக் குழுவைக் குறை கூறிக் கொண்டிருக்கக் கூடாது.

 

பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்பாளிகள் யாருமே விருதுகளை எதிர்பார்த்தோ அல்லது விருதுகளுக்காகவோ படம் எடுப்பவர்கள் கிடையாது. அவர்கள் கலைக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் படம் எடுக்கிறார்கள். மக்களின் மனங்களில் அந்தப் படங்கள் பெற்ற இடமே அவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று கூறினார்.