“பிரிந்திருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது”
அரசியல் ரீதியாக பிரிந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், அரசாங்கத்திற்காகவோ எதிர்க்கட்சிக்காகவோ அல்லாது நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரையும் ஒன்றிணையுமாறு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் முதற்கட்ட திறப்பு விழா,வியாழக்கிழமை (15) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தினால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கும் குடிநீர் தேவைக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் இந்த திட்டத்தினால் விவசாயத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தான் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்
இங்கு கருத்துரைத்த நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட போது தயக்கமின்றி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாகவும், நாட்டை மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்காமல் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதியை பாராட்ட வேண்டும் என்றார்.