சொத்துக்களை விற்று வாழ்வாதாரத்தை நடத்தும் மக்கள்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தங்கள் சொத்துக்களை விற்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நாணய வீழ்ச்சி காரணமாக வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள மக்கள், மிக குறைவாக உணவு உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் பத்தில் மூன்று குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும் பத்தில் ஏழு குடும்பங்கள் மிகவும் குறைவான அளவில் உணவை உட்கொள்வதாகவும் உலக உணவு திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு
அத்துடன், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் மாதம் முதல் இந்த நிலையை அவதானிக்க முடிந்துள்ளதெனவும் பத்தில் எட்டு குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை விற்று வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நெருக்கடியை எதிர்நோக்க ஆரம்பித்ததிலிருந்து உலக உணவு திட்டம் 1 மில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியை வழங்கியுள்ளதோடு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு உணவளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த அக்டோபர் மாதத்திற்குள் அதிகளவில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்திய உலகின் முதல் 10 நாடுகளுள் இலங்கை 8 ஆவது இடம் பிடித்திருந்ததென்பதை உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.