குற்றச்சாட்டுகளை கைவிட தயாராகின்றது அமெரிக்கா?
விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை கைவிடவேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இரகசிய தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக விக்கிலீக்ஸ் இணை ஸ்தாபகருக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து அமெரிக்கா கடந்த ஒரு தசாப்தகாலமாக தீவிரகவனம் செலுத்திவருகின்றது.
பிரிட்டனின் சிறையிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ள அவுஸ்திரேலிய பிரஜையான ஜூலியன் அசஞ்சேயிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கைவிடவேண்டும் என அவுஸ்திரேலியாதொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகின்றது.
இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி;க்கு பதில் அளித்துள்ள ஜோ பைடன் அவுஸ்திரேலியாவின் வேண்டுகோளை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
பைடன் நிர்வாகம் ஜூலியன் அசஞ்சேயை விசாரணைக்கு உட்படுத்துவதை கைவிட தயாராகின்றது என்பதற்கான அறிகுறிகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன எனினும் இது ஜனாதிபதி தேர்தலில் பைடனிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஜூலியன் அசஞ்சே இரகசிய ஆவணங்களை தவறாக கையாண்டதை ஏற்றுக்கொண்டால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் சில நாட்களிற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜூலியன் அசஞ்சே பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றமை குறிப்பிடத்தக்கது.